சமூக நீதி மற்றும் மாற்றத்தில் இளைஞர்கள்

 ஊடகத்தில் மூழ்கிக்கிடக்கும் வாலிபரே - நன்கு

உற்றுப்பாருங்கள் உலகம் பெரியதென்று

படவரி மட்டுமே வாழ்க்கையென - தினம்

பயனற்ற அழுகை எதற்காகவோ?


ஓங்கி உயர்ந்த மதில்களின் நடுவில்

ஓரமாய் எங்கோ ஒளிந்திருக்கிறாயே?

படவரி என்றும் தொழிலின்யுக்தி - இதோ

பார் நீயோ இந்நாட்டின் சக்தி


சாதிக்கும் நெருப்பை உன்னிடம் தேடினால்

இலவச நெருப்போடு உலாவுகிறாய்

போதிக்கும் வழிக்காய் கணினியைக் கண்டாய் 

போரடிக்கென்று வகுப்பை அணைத்தாய்


விஞ்ஞான வாழ்க்கையில் 

விந்தைகள் அனுதினம் - அதில்

விடியற்காலையில் துயிலாடப்போவது

விந்தைக்கே புதுவிதம்


சாத மின்றி வாழ்கிறாய்

சாம்சங் கின்றி சாகிறாய்

வாத மின்றி வாழ்கிறாய்

வாட்சப் பின்றி சாகிறாய்


இணையம் ஒருவன் இருக்கிறான் - அவன் 

இறகு விரித்துப் பறக்கிறான்

இறைவன் வெறுக்கப் படுகிறான் - இவன் 

இல்லை என்றதும் சாகிறான்


வளம்பெறும் நாட்டில் இந்தியா ஒன்று

வளம்பெற்ற நாட்டில் இல்லை இன்று

வருமெனச் சொல்லி மாய்ந்தோர் நேற்று

வார்த்தையில் வடைசுட்டு தோற்றோம் இன்று


வளர்ச்சியை எட்டிய தலைமுறை நாங்கள்

வறட்சியில் மாண்டு ஆறாய் போனோம்

விரக்தியின் பெயரால் மீண்டெழ பார்ப்போம்

வல்லரசாக்கிடக் கணினியை பார்ப்போம்


                           - சகாய கவியரசன்












Comments